Friday, 14 June 2019

முர்முரேஷன் (Murmuration)


பறவைகள் கூட்டம் கூட்டமாக, டிசைன் டிசைனாக பறப்பதை முர்முரேஷன் என்பார்கள். கூட்டம் என்றால் பெருங்கூட்டம்தான்… ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்று சேர்ந்து பறக்கும்.

இத்தனை பறவைகள் ஒன்று சேர்ந்து, வானத்திலே அழகாக கோலம் போடுவதை போன்று உருவாக்கும் டிசைன்கள் ஒரு நொடியில் மாறிவிடுவது கண்களுக்கு விருந்தாகும்.

பில்பர் என்னும் புகைப்படக்கலைஞர் ஒருவர், ஸ்பெய்ன் நாட்டில் இப்படிப்பட்ட முர்முரேஷன் படங்களை எடுத்தார். படம் எடுக்கும் போது எப்பேற்ப்பட்ட பொக்கிஷத்தைப் படம் பிடித்திருக்கிறோம் என்று அவருக்கே தெரியாது. காரணம், கூட்டமாக பறக்கும் பறவைகள் நொடிக்கொருதரம் வடிவங்களை மாற்றிக் கொள்ளும்.

பின்னர், வீட்டிற்கு வந்து படங்களை கம்யூட்டரில் அப்லோட் செய்து பார்த்து வியந்தார். இந்தப் படங்கள் அவருக்குப் புகைப்படப்போட்டிகளில் பரிசுகளைப் பெற்று தருகிறது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
Image may contain: sky, mountain, cloud, nature and outdoorImage may contain: sky, water, outdoor and nature
Image may contain: sky, outdoor and nature

Thursday, 13 June 2019

இரவு உயிரிகள் (Nocturnal)


மனிதர்களுடைய நடமாட்டத்திற்கு அஞ்சி, பிற உயிரினங்கள், குறிப்பாக பாலூட்டிகள், தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்கிறதாம்.

6 கண்டங்களில் 62 உயிரினங்களை ஆய்வு செய்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் நடமாட்டம் காரணமாக, உயிரினங்கள் இரை தேடும் நேரத்தை மாற்றிக் கொள்வது, குறைந்த நேரமே இரை தேடுவது, வழக்கமாக தாங்கள் புழங்கும் இடத்தை மாற்றிக் கொள்வது என்று பலவிதங்களில் மாறி வருகின்றன.

சில உயிரினங்கள் மனிதர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக இரவு உயிரிகளாக (Nocturnal) மாறுகின்றனவாம்.

இதே போல வெயில் கொளுத்தினால் இந்தியாவில் மனிதர்களும் இரவு உயிரிகளாக மாற வேண்டியதுதான்.


Thursday, 6 June 2019

இந்தியாவில் 44% பேருக்கு தாய்மொழி ஹிந்தியா?


“ஹிந்தியில் இருப்பது இரண்டே இலக்கியங்கள்தான் – ஒன்று, துளசி ராமாயணம். இன்னொன்று ரயில்வே கைடு” என்று அண்ணா கூறியதாக ஒரு ஜோக்கைப் படித்தேன். ஜோக்கிற்கு சிரிக்கும்போதே சந்தேகம் வந்து கொஞ்சம் ஆராய ஆரம்பித்தேன்.

துளசியின் ராமாயணமான ராம்சரிதமானஸ் ‘அவதி’ என்னும் மொழியில் எழுதப்பட்டது. அவதி என்பது தெற்கு நேபாளம், அதற்கு கீழே இருக்கும் உ.பி பகுதிகளில் பேசப்படும் மொழி. அது ஒரு தனிமொழி என்று வாதிடுவோரும் உண்டு… ஹிந்தியின் ஒரு வட்டார வழக்குதான் என்று கூறுபவர்களும் உண்டு.

இந்திய சென்சஸ் படி அவதியைத் தாய்மொழியாகக் கொண்ட 38 லட்சம் பேரும் இந்தி பேசுபவர்கள்தான். இப்படி எத்தனை மொழிகள் ஹிந்தியின் வட்டார வழக்காகக் கணக்கிடப்படுகிறது என்று பார்த்தால், எண்ணிக்கை மலைக்க வைக்கிறது.

ஹிந்திக்கு கீழே 55 வட்டாரவழக்குகள் இருக்கின்றன. 56வது Others என்று துக்கடா கேட்டகரி மொழிகளை மட்டுமே 1.67 கோடி பேர் பேசுகிறார்கள்.

சரி எந்த வட்டார வழக்குகள்/ மொழிகள் நிறைய பேசப்படுகின்றன? போஜ்பூரி 5.05 கோடி, ராஜஸ்தானி 2.58 கோடி, சத்தீஸ்கர்ஹி 1.62 கோடி, மகதி 1.27 கோடி, ஹர்யான்வி 1 கோடி மக்களுக்குத் தாய்மொழி. இதில் எது வட்டார வழக்கு, எது தனி மொழி? தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்டாலே அது ஹிந்திதான் என்று எடுத்துக் கொள்கிறார்கள் போல.
ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று சென்சஸ் சொல்லும் 52.83 கோடியில் வட்டார வழக்குகள் பேசுபவர்கள் 20.61 கோடி(39%). இப்போது மற்ற முக்கிய மொழிகளைப் பார்ப்போம். (அதாவது, 5 கோடி பேருக்கு மேல் பேசும் மொழிகள்)

பெங்காலி 9.72 கோடி (வட்டார மொழி பேசுவோர் 1.03%), மராத்தி 8.30 கோடி (0.24%), தெலுங்கு 8.11 கோடி (0.25%), தமிழ் 6.90 கோடி (0.14%), குஜராத்தி 5.55 கோடி (0.72%), உருது 5.07 கோடி(0.11%).ஆக, 

முக்கிய மொழிகளில் வட்டார மொழியினர் வெறும் கால் சதவிகிதம்தான். குஜராத்தியில் முக்கால் சதவிகிதம், அதிகபட்சம் பெங்காலியில் கூட ஒரு சதவிகிதம்தான். ஆனால், ஹிந்தியில் மட்டும் வட்டார மொழியினர் 39%. வாவ்..! (போஜ்பூரி பேசுபவர்கள் மட்டுமே 5.05 கோடி)

உண்மையிலேயே அவை தனி மொழிகளா, வட்டார மொழிகளா என்னும் விவாதத்தில் இறங்க எனக்குத் தகுதி கிடையாது. ஆனால், 39% என்பது பெரிய நம்பர்… சந்தேகத்தைத் தருகிறது.

ஹிந்தியின் ஆதிக்கத்தால் அவதி, போஜ்பூரி போன்ற மொழிகள் சொல்வளத்தை இழந்துவருகின்றன. வெளியிடங்களில் வேற்றுமொழி ஆதிக்கம் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளிலும் நுழைந்து தாய்மொழியை அழித்துவிடுகிறது.

நேற்று ஒரு பதிவைப் பார்த்தேன். உ.பி மாநிலத்தில் ஹிந்தி பாடத்தில் 10 லட்சம் பேர் தேர்வில் தோல்வியடைந்தனர் என்றால் நாம் சிரிக்கிறோம். ஆனால், இதில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர்களுக்கு ஹிந்தி தாய்மொழி இல்லை. அதனால்தான் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்று பதிவர் கருத்துக் கூறியிருந்தார். சிந்திக்கவேண்டிய விஷயம்தான்.

இப்படி வட்டாரமொழிகளை ஏன் ஹிந்தியாக எடுத்துக்கொள்ளவேண்டும்? இந்தியாவில் 44% பேர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று சொல்வதற்கும், இந்தியாவில் 26% பேர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதற்கும், தாக்கத்தில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பாருங்கள்...!

ஆதாரம் – 2011 சென்சஸ் அறிக்கை (http://www.censusindia.gov.in/2011Cen…/C-16_25062018_NEW.pdf)