Thursday, 6 September 2018

377


இன்றைய 377 தீர்ப்பு பல அச்சங்களையும், கவலைகளையும் விதைத்துள்ளதை என் நட்பு வட்டத்திலேயே பார்க்கிறேன்.

ஒரு சின்ன தகவல்… 2016 தரவுகள் படி இந்தியாவில் ஒரு நாளைக்கு 106 கற்பழிப்புகள் நடக்கின்றன. இதில் 40% மைனர்கள் மேலான தாக்குதல். கிட்டத்தட்ட 95% வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் மிக நெருங்கிய சொந்தங்களே..! (அப்பா, தாத்தா, சகோதரன், மகன் போன்றவர்கள்)

இது போலீஸில் ரிப்போர்ட் செய்யப்பட்ட குற்றங்கள் மட்டுமே…. வெளியில் சொன்னால் மானம் போகும் என்று பயந்து, தொண்டைக்குள் கசப்பை விழுங்கி, தலையில் தண்ணீர் ஊற்றி கொண்டு மறைத்தவை தனிக்கணக்கு.

இதற்கு என்ன செய்யலாம்…? நாளை முதல் ஆண்-பெண் திருமணத்தை நிறுத்தலாமா? அல்லது ஆண்களையும் பெண்களையும் தனித்தனி சமூகமாக்க போகிறோமா? இந்த ரேஞ்சில் யோசித்தால் பிரியாணி கடைகளை கூட மூடவேண்டி வரும்.

377 சட்ட மாற்றத்தினால் தவறுகள் அதிகரிக்கும் என்னும் சிந்தனை, LGBT சமூகத்தின் மேல் கொண்டிருக்கும் தவறான பிம்பத்தினால் எழுவதுதான்…. அதைவிட எண்ணிக்கையில் பல மடங்குகள் அதிகமான ஆண் இனம் செய்யாத குற்றங்கள் LGBT சமூகத்தால் பெருகும் என்று நினைப்பது சுத்த அபத்தம்.

சமூகத்தில் சிலருக்கு பால் விருப்பங்கள் வேறுபடுகின்றன. அது அவர்களது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயம். மதத்தின் காரணமாகவோ, பெருவாரியான விருப்பத்திற்கு மாற்றாக இருப்பதன் காரணமாகவோ அவர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது. இப்போது அவர்களுக்கு ஒரு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தேவையற்ற சித்ரவதைகளில் இருந்து ஒரு விடுதலை கிடைத்துள்ளது.

US, UK, Australia, ஐரோப்பிய, தென்அமெரிக்க நாடுகளில் எல்லாம் ஒரு பால் மணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் இப்போது இந்தியாவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஒருபால் தம்பதியினர் குழந்தை பெற்று கொள்கின்றனர். சிறப்பாகவே குழந்தைகளை வளர்க்கின்னறனர். நம்மை போல்தான் அவர்களும்.

இந்த 377 தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், இந்த சட்டதிருத்தத்தை தவறான முறையில் பயன்படுத்தாத வகையிலும், நெறிப்படுத்தவேண்டிய முறையிலும் சட்டரீதியான வேறு மாற்றங்களும் தேவைப்படுகிறது. சட்டநிபுணர்கள் கூடிய விரைவில் மற்ற சட்டங்களில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவார்கள் என்று நம்புகிறேன்.

முன்னேற்றம் என்பது அனைவரையும் அரவணைத்து செல்வதுதான். அந்த வகையில் ஒரு அரவணைப்பு இன்று நடந்துள்ளது. அதை வாழ்த்துவோம்….!

இந்திய தொல்லியல் புதிய கண்டுபிடிப்புகள்


சிந்து சமவெளி நாகரீகத்தை குறித்து புதிய செய்தி ஒன்று போன வாரம் வெளியானது. தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த ஒரு மனிதனின் காது எலும்பை DNA ஆய்வு செய்ததில், ஆரிய ஜீன் எனப்படும் R1a ஜீன் அந்த மனிதஉடலில் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. அந்த உடலில் உள்ள ஜீன்அமைப்பு தமிழகத்தில் நீலகிரி மலையில் உள்ள இருளர்களோடு ஒத்துப்போகிறது.

மாறாக, வடஇந்தியாவை சேர்ந்தவர்களின் ஜீன்கள் வடக்கு ஐரோப்பியர்களின் ஜீன்களோடு ஒத்துப்போகின்றன. வடக்கு ஐரோப்பியர்கள் மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளி பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். ஆக, வடஇந்தியர்களும் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து இடம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்னும் கருத்துக்கு இந்த ஜீன் ஆராய்ச்சி வலுசேர்க்கிறது. (இந்த இடப்பெயர்வு எல்லாம் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.)

1920-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தொல்லியல் ஆய்வுகள் நடந்தபோது, சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் வேதகாலத்திற்கு முற்ப்பட்டவர்கள் என்றும், அவர்களை ஆரியர்கள் படையெடுத்து வந்து வென்றதாகவும் கூறப்பட்டது. சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்று ஆரிய-திராவிட தியரிகள் தோன்றின.

ஆனால், இந்தியாவில் இருக்கும் மதம் மற்றும் கட்சி சார்ந்த அரசியல் காரணமாக அந்த தியரி அவ்வளவு பெரிதாக எடுபடவில்லை. தற்போது மத்தியில் பாஜக அரசு இருப்பதால், இந்த ஆராய்ச்சி முடிவுகளை பூசிமெழுகும் முயற்சிகளும் நடப்பதாக தெரிகிறது.

காரணம், ஹிந்துத்வா அரசியல் எனலாம். இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஹிந்துக்கள், இந்த மண் ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது, புராணங்கள் என்பவை கட்டுக்கதைகள் அல்ல, அவை உண்மையான வரலாறு என்றெல்லாம் சொல்லும் ஹிந்துத்வா அரசியல், இந்தியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த குடிகள் என்பதை எவ்வாறு ஒப்புக்கொள்ளும்?

மத்திய அரசு ஏற்கனவே ஒரு தொல்லியல் துறை கமிட்டியை அமைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கமிட்டியின் வேலை, வேதங்கள், புராணங்களை ‘தேவையான சான்றுகளோடு’ உண்மை என்று நிரூபிப்பது. அதாவது, இந்த ஆராய்ச்சிகளுக்கு எதிர் ஆராய்ச்சி அரசாங்க ஆதரவோடு நடக்கிறது.

பல மதத்தலைவர்கள் கூட ஆரிய-திராவிட தியரிகளை ஒப்புக்கொள்வதில்லை. அது ஹிந்து மதத்தை சிதைக்கக்கூடும் என்னும் அச்சம்தான் காரணம்.

ஆனால், அறிவியல் என்பது ஈவிரக்கமற்றது. அது உண்மையை சமரசம் இல்லாமல் காட்டுவது. சமரசமில்லாமல் உண்மைகள் வெளியாகுமா என்பது மட்டும்தான் கேள்வி.

முழு விவரங்களோடு படிக்க விரும்புவோருக்கு –
  1. https://www.indiatoday.in/amp/magazine/cover-story/story/20180910-rakhigarhi-dna-study-findings-indus-valley-civilisation-1327247-2018-08-31?__twitter_impression=true
  2. https://tribune.com.pk/story/1654465/3-modi-appoints-committee-scholars-prove-hindus-descended-indias-first-inhabitants/