Saturday, 25 May 2019

Manekken Pis


மானேகென் பிஸ் என்பது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் இரண்டு அடி உயரம் கொண்ட ஒரு வெண்கலச் சிலை. மானேகன் பிஸ் என்றால் the litter pisser, அதாவது சிறுநீர் கழிக்கும் சிறுவன் என்று அர்த்தம்.

ஆமாம், சிறுநீர் கழிக்கும் சிறுவன் சிலைதான் பிரஸ்ஸல்ஸ் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. பிரஸ்ஸல்ஸ் நகர மக்களின் நகைச்சுவை உணர்வுக்கு அடையாளமாக இந்தச் சிலை விளங்குகிறது. நகைச்சுவைக்கு மட்டுமல்ல, அவர்களின் தன்மான உணர்வுக்கும் இந்தச் சிலை அடையாளம் எனலாம்.

இந்தச் சிலையை எப்போது நிறுவினார்கள் என்று தெரியவில்லை. ஏன் நிறுவினார்கள் என்று பல கதைகள் இருக்கின்றன. எனக்குப் பிடித்தக் கதை இதுதான். ஒரு முறை பிரஸ்ஸல்ஸ் நகரம் முற்றுகைக்கு உள்ளானது. எதிரிகள் கோட்டையை வெடி வைத்துத் தகர்க்க பார்த்திருக்கிறார்கள். எதிரிகள் இடையே உளவு பார்க்கச் சென்ற சிறுவன் ஒருவன், பற்றியெரிந்த திரி மீது சிறுநீர் கழித்து அதை அணைத்திருக்கிறான். பிரஸ்ஸல்ஸ் நகரையே காப்பாற்றிய இந்தத் தீரச்செயலைப் (!) பாராட்டி சிலை வைத்தார்களாம். (ஏதோ தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சீன் பார்த்த ஞாபகம் இருக்கிறது..!)

1451-ம் வருடத்தைய பிரஸ்ஸல்ஸ் நகர குடிநீர் சப்ளை கட்டுமானம் குறித்த ஆவணங்களிலேயே இந்தச் சிலையைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. 1619-20ல் பழைய சிலை அகற்றப்பட்டுப் புதிதாக வெண்கல சிலையொன்று அமைக்கப்பட்டது. இப்போது இருக்கும் சிலை ஒரிஜினல் சிலை கிடையாது. ஒரிஜினலை மியூசியத்தில் வைத்துவிட்டு, அதே போல டூப்ளிகேட் செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்தச் சிலை பிரஸ்ஸல்ஸ் நகர அடையாளம் என்பதால் போர்களில் இதைத் சேதப்படுத்த முயன்றிருக்கின்றனர். திருடர்கள் இதைக் களவாட பார்த்திருக்கின்றனர். இது போல பல சம்பவங்கள் நடந்திருக்கிறது.

ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் சிறப்புப்படைப் பிரிவொன்று இந்தச் சிலையைத் திருட முயல, மக்கள் வீராவேசமாக கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். மக்கள் எதிர்பைக் கண்டு திகைத்த பிரான்ஸ் மன்னர் 15ம் லூயி, திருட்டு முயற்சியைக் கைவிட்டு, தங்க அங்கி ஒன்றைப் பரிசாக அளித்திருக்கிறார். இது போல பல்வேறு நாட்டினர் இந்தச் சிலைக்கு ஆடைகளை அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். (போன மே மாதம் வரை இதுமாதிர 1000 உடைகள் சேர்ந்திருக்கின்றன)




விசேஷ நாட்களில் இந்தச் சிலைக்கு விதவிதமான ஆடை அலங்காரங்கள் செய்வர். சாதாரண தண்ணீருக்குப் பதிலாக பீரை சிறுநீராக கழிப்பது போல செட்டப் செய்வார்கள். அந்தப் பீரை அனைவரும் குடித்து மகிழ்வார்கள்…!

அடுத்த சனிக்கிழமை, அதாவது, ஜூன் ஒன்றாம் தேதி உலக பால் தினமாம்…. அன்று இந்தச் சிறுவன் பாலைக் கழிக்கப் போகிறானாம். அதைப் பிடித்துக் குடித்துக் கொண்டாட போகிறார்கள்.

என்னது, ‘அவர்’ எப்போ பிரஸ்ஸல்ஸ் போவாரா? ஆளை விடுங்க…!