Friday 19 April 2019

சம்மதத்தோடு உறவு, கற்பழிப்பா?


போன வாரம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு…

சத்தீஸ்கரில் ஒரு ஆள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியிருந்தார். இரண்டு வீட்டின் சம்மதமும் அந்தத் திருமணத்திற்கு இருந்தது. பிற்பாடு என்ன காரணமோ, அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு திருமணம் நிச்சயம் ஆனது. இந்த விஷயம் முதல் பெண்ணிற்கு தெரியாது.

அப்புறம் ஆசாமி என்ன பண்ணினார் என்றால், முதல் பெண்ணின் சம்மதத்தோடு ஜாலியாக இருந்தார். வேலை முடிந்ததும் இந்தப் பெண்ணைக் கழட்டி விட்டுவிட்டு நிச்சயம் செய்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். சந்தேகமே இல்லாத, பக்கா திட்டமிட்ட ஏமாற்று வேலை…!

போலீஸ் புகார், வழக்கு என்று கதை போனது. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், அந்த நபர் மேல் கற்பழிப்புக் குற்றம் சுமத்தி 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. மேல் முறையீட்டில் சு.கோர்ட் கற்பழிப்புக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது, தண்டனையை மட்டும் 7 ஆண்டுகளாகக் குறைத்திருக்கிறது.

எனக்கு என்ன விசித்திரமாகப் படுகிறதென்றால், சில காலத்திற்கு முன்னால் லிவ்இன் உறவுகளை இதே சு.கோர்ட் அங்கீகரித்தது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, லிவ்இன் உறவில் இருந்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், சம்மதத்தோடு நடந்த உறவு கற்பழிப்பாக மாறிவிடுமா? என்ன லாஜிக்?

இதற்கு கோர்ட் அளித்திருக்கும் விளக்கம்தான் தலையைச் சுற்ற வைக்கிறது. "It tantamounts to a serious blow to the supreme honour of a woman and offends both her esteem and dignity."

பெண்ணின் கண்ணியமும், கௌரவமும் கற்பில் இருக்கிறது போன்ற சிந்தனைகளை இன்னும் எத்தனை காலத்திற்கு வைத்துக் கொள்ளப்போகிறோம்? கற்பு என்னும் நிலைப்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு கற்பழிப்புக் குற்றத்தைப் பார்ப்பதால்தான் marital rape வன்முறையாக இருந்தாலும் இந்திய சட்டப்படி அது தவறாகக் கருதப்படவில்லை. திருமணம் இல்லையென்றால் சம்மதத்தோடு நடக்கும் உறவும் கற்பழிப்பாகக் கருதப்படுகிறது.

With due respect to Supreme Court, சம்மதத்தோடு உறவு கொள்வதைக் கற்பழிப்பு என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. லிவ்இன் தீர்ப்போடு இது முரண்படுவதாகக் கருதுகிறேன்.

Ref - https://www.ndtv.com/india-news/sex-on-false-promise-of-marriage-is-rape-supreme-court-2023409